செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மஷ்ரூம் க்ரேவி






எங்கள் வீட்டுக்கே மஷ்ரூம் கொண்டுவருவார் ஒரு பெரியவர். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாக  வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் என்ன, இன்னநாள் தான் என்ற கணக்கில்லை, எப்பவாவது வருவார்.
எங்கள் தெருவில் இருக்கும் அனைவருமே வாங்குவது வழக்கம்.

அதனால் எங்கள் வீட்டில் திடீர் காளான் குழம்பு, காளான் ப்ரியாணி எல்லாம் செய்வது உண்டு. அதே போல் இன்றும்  வாங்கினோம்.
கூடவே ரெடிமேட் இடியாப்பம், ஒப்பிட்டு (போளி), பரோட்டா எல்லாமே இருக்கும்.
இது வரை காளான் மட்டுமே வாங்கியுள்ளேன். சிப்பிகாளான், மொட்டுகாளான் இரண்டு வெரைட்டியும் கொண்டு வருவார்.

இரவு உணவுக்கு சப்பாத்தியும், காளான் க்ரேவியும் தயாரித்து சாப்பிட்டும் ஆச்சு.  சுவை மிகவும் நன்றாக இருந்தது.


தேவையான பொருட்கள்:

மொட்டு காளான்.........1 பாக்கெட்

தக்காளி...........2

பெரியவெங்காயம்......2

குடைமிளகாய்.............1

மிளகாய்தூள்.............2 மேசைக்கரண்டி

மல்லித்தூள் ................2மேசைக்கரண்டி

சீரகத்தூள்...............1 தேக்கரண்டி

இஞ்சி,பூண்டுபேஸ்ட் ............. 1மேசைக்கரண்டி

உப்பு.................தேவையான அளவு

மல்லித்தழை...........கைப்பிடி அளவு

ரீஃபைண்ட் கடலை எண்ணய்........2 மேசைக்கரண்டி

செய்முறை:

 காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை சதுர துண்டுகளாக நறுக்கவும்.

குடை மிளகாயை நடுத்தர அளவு துண்டுகளாக்கி வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக்கி வைக்கவும்.

சீரகப்பொடி இல்லையென்றால், சீரகத்தை வெறும் வாணலியில் குறைந்த தணலில் வறுத்து பொடிக்கவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்த உடன் எண்ணைய் ஊற்றவும்.

எண்ணைய் காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு மிதமான பொன்நிறமாக வதக்கவும்.

அதன்பின் தக்காளி கூழை ஊற்றி வாசனை போகும் வரை கிளறவும்.

பொடிவகைகளைப் போட்டு கிளறி, பின்பு காளானை போட்டு கிளறிவிட்டு தீயை குறைத்து மூடி வைக்கவும். காளான் நீர் விட்டு வரும்.

அதன் பின் குடைமிளகாயைப் போட்டு கிளறி விடவும்.

2 நிமிடம்  1/2 கழித்து நீர் விட்டு உப்பு போடவும்.

நன்கு வெந்து நீர் வற்றியவுடன், மல்லித்தழை தூவி அடுப்பை நிறுத்தவும்.











சப்பாத்தி, பரோட்டா, புலாவிற்கு சிறந்த இணை உணவாகும்.

                                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 உழைப்புக்கு மாற்று உழைப்புதான்; வளர்ச்சி அடைவது, உங்கள் செயல்பாட்டை பொறுத்தது.

                                                              _()_()_()_()




திங்கள், 2 பிப்ரவரி, 2015

பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு

 

 பாகற்காயில் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து இருப்பதின் காரணமாக வாரத்தில் ஒருநாளாவது  உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். மேலும் குடற்புழுக்களை அழிக்கும் சக்தியும் பாகற்காயிற்கு உண்டு.

நாட்டு மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டும். இல்லையேல் மருந்தின் பலன் கிட்டாமல் போய்விடும்.மருந்தினை முறிக்கும் சக்தி பாகற்காயிற்கு உண்டு.

நார்மலாக இருப்பவர்களுமே வாரத்தில் ஒருநாள் மட்டுமே பாகற்காய் சாப்பிட வேண்டும். அகத்தி கீரையும் இதே போல்தான்.

சில பேர் கேட்பாங்க "எப்படித்தான் பாகக்காய இப்படி வார ஒருக்கா சமைக்கிறீங்களோ..பரவால்ல உங்க புள்ளைங்க சாப்பிட்டுறாங்க..."என என்னிடமே கூறி இருக்கின்றனர்.

எங்க வீட்டு புள்ளைங்க ஒண்ணும் பாகக்காயை சமைச்சுக் கொடுத்தா அப்பிடியே சிரிச்சுக்கிட்டு, கொடுங்க கொடுங்க, இன்னும் கொஞ்சம் கொடுங்கனுலாம் கேட்கமாட்டாங்க.
ஆனாஎப்படியும் அம்மா விடமாட்டாங்க என்ற எண்ணத்திலேயே ஆரம்ப நாட்களில் சாப்பிட ஆரம்பிச்சாங்க. இப்ப அதே தொடர்ந்து பழக்கமானதால அந்த ருசி அவங்களுக்கு பிடிச்சு போச்சு என்று கூறுவேன்.

ஆனா இன்னிக்கு இந்த குழம்பு செய்து, இதனை தொட்டு சாப்பிட சப்பாத்தி செய்தேன்.  இட்லிக்கு தொட்டுக்கொள்ள பாகற்காயில் வேறுவிதமான குழம்புகள் வைத்ததுண்டு.
சப்பாத்திக்கு இதுவே முதல் முறை.

என் மகன் பார்த்த உடனே சொன்னது இதுதான்" அம்மா நீங்களே சொல்லுங்க, இப்படி ஒரு காம்பினேஷன் யாராவது சமைச்சு இருப்பாங்களா? நீங்க சொல்லி சொல்லி பாகக்காயை சாப்பிட பழகிட்டோம்.  அதுக்காக சப்பாத்திகலாம் சைடிஷா வெக்கிறீங்களேனு கேட்டார்".

வேறு வழியில்லாமல் சாப்பிட ஆரம்பித்து பிறகு ருசி பிடித்து போயிற்று.

நிஜமாவே நல்லா இருந்துச்சுங்க, நீங்களும் சமைத்துதான் பாருங்களேன்.


தேவையான பொருட்கள்:

பாகற்காய்..........2

தக்காளி........2 (பெரியது)

பெரியவெங்காயம்........1

சாம்பார் பொடி............2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள்.........1/4 தேக்கரண்டி

உப்பு.........தேவையான அளவு

அரைக்க:

சோம்பு........1/2 மேசைக்கரண்டி

புளி.....பெரிய நெல்லிக்காய் அளவு

தேங்காய்..........1/2 மூடி

தாளிக்க:

கடலைஎண்ணய்........1 மேசைக்கரண்டி

சோம்பு...1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை........1 இணுக்கு

செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி, பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

அரைக்க கொடுத்தவற்றை நன்கு மை போல் அரைக்கவேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்தவுடன், எண்ணய் ஊற்றி சோம்பினை பொரியவிடவேண்டும்.

பின்னர் அரிந்து வைத்த பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.

பின்னர் தக்காளியை போட்டு குழைய வதக்கி, சாம்பார் தூள் , மஞ்சள் தூள் போடவேண்டும்.

பின்னர் பாகற்காயை போட்டு நன்கு வதக்கி உப்பு சேர்க்கவேண்டும்.

அரைத்த விழுதினை ஊற்றி, தேவையான அளவு நீர் விடவேண்டும்.

காரம் அதிகமாக சேர்ப்பவர்கள் தாளிக்கும் போது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குழம்பு நன்கு கொதித்து, காய் வெந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.




சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

                                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~

எவரொவருவர் சந்தேகத்தையும், பயத்தையும் வெற்றி கொள்கிறாரோ, அவரே தோல்வியை ஜெயிப்பார்.

எம்கூடு தேடி வந்த பறவை

யாரோ கவனிக்கிறாப்பிலயே இருக்கே...!






சரி நாம வந்த வேலைய பாப்போம்...!!

ஹை....கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?:))) .உள்ளே போறதுக்கு வழி இருக்கு...!!!

ம்ஹூம்..இல்லையே..:(  இந்த வீடு கட்டின இஞ்சினீரு சரி இல்ல....

மேலே எதாச்சும் வேற வழி இருக்கானு பார்ப்போம்...

சரி இல்லேனா என்ன, நம்ம கனத்த மூக்கு எதுக்கு இருக்கு..லொட் லொட்..


அட போங்கடா உங்க கூடும் நீங்களும்னு பறந்து போய்டுச்சு :(

இங்க தேன் சிட்டு நிறைய பறக்கும், அதுக்கு ஆகும்னு நினைச்சு, இந்த கூடுகள் அக்ரி இன்டெக்ஸ்ல வாங்கினது.

தேங்கா தொட்டி வெச்சு செய்து இருக்காங்க. நல்லா பெரிய தேங்காயை ஒரு ஓரத்தில ஓட்டை  போட்டிருப்பது போலவே இருக்கும்.

ஒரு கூடு 100 ரூபாய்னு 200 ரூவாக்கு 2 கூடு வாங்கியாந்து, முதல்ல மகிழம்பூ மரத்தில மாட்டினோம்.

ஆனா பாருங்க மழை பேஞ்சா மழைத்தண்ணிக்கு வடிகால் வசதியில்லாத கூடு இது. அதுனால கார்போர்ச் ல மாட்டிவெச்சிட்டோம்.

இது வரை ஒரு ஈ, குருவி கூட எட்டிப்பாக்கல. நேத்து மதியம் திடீர்னு இவுங்க வந்தாங்க, ரொம்ப உரிமையோட சுத்தி சுத்தி பாத்துட்டு, இது சரிபட்டு வராதுனு கிளம்பிட்டாங்க :(

ஆமா வந்தவரு பேரு ஊர்லாம் என்னானே தெரில....

ஆனா அலகு நல்லா கனத்து இருந்தது. நல்லா தைரியசாலினு மட்டும் தெரிஞ்சுது.
இந்த போட்டோலாம் உள்ள இருந்து, கண்ணாடி ஜன்னல் வழியா எடுத்தது.

நீங்களும் பார்த்து ரசிங்க.

இந்த கனத்த மூக்கு பறவைக்கு என்னா பேருனு தெரிஞ்சா விரைவில் இங்கு சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ஒரு காக்கா பாட்டு. சின்ன புள்ளைல படிச்சது..

"கனத்த மூக்கு காக்கா
கழுத்த நீட்டு சோக்கா
இனத்தைக் கொஞ்சம் கூப்பிடு
இந்தா சோறு சாப்பிடு
மணி அடிக்கும் வந்திடு
மாங்கா எனக்கு தந்திடு"

ஹீ ஹீ குருவிக்கு காக்கா பாட்டு :))) 

                                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உழைப்பால் ஒருவன் உயர்வைப் பெறலாமே அன்றி, 
யோகத்தால் உயர்வை ஒருநாளும் பெறமுடியாது.

எடிசன்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

முட்டை ப்ரெட் உப்மா


முட்டை ப்ரெட் உப்மா
 இந்த உப்மா செய்ய மிகக்குறைந்த நேரமே போதுமானது. அவசரமாக காலைவேளையில் வெளியில் செல்வோருக்கான மிகவும் எளியவகை உணவு இது.

தேவையான பொருட்கள்:

முட்டை...........4

ப்ரெட்...................6 துண்டுகள்

தக்காளி..........1 சிறியது

பெரியவெங்காயம்.......1

பச்சை மிளகாய்.....2 (காரத்திற்கேற்ப)

புதினா..........1கைப்பிடி (விருப்பபட்டால்)

மஞ்சள்தூள்........சிறிது

உப்பு.......1/4 தேக்கரண்டி

தாளிக்க:

சோம்பு/ பெருஞ்சீரகம்..........1தேக்கரண்டி

கடலை எண்ணய்........1மேசைக்கரண்டி

(நான்  கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்தேன், சோம்பு போட்டால் வேறு விதமான ருசி கொடுக்கும்)

செய்முறை:

முதலில் ப்ரெட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். 

பெரிய வெங்காயத்தை பொடியாக அரியவும்.

பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து, விதைகளை அப்புறப்படுத்தவும். (ப.மிளகாய் விதைகள் மூல நோய் வருவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது).

தக்காளியையும் பொடியாக அரியவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி,  காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சோம்பு போட்டு பொரியவிடவும்.

பின்னர் பெரிய வெங்காயம், மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமானவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும். 

மஞ்சள்தூள் உப்பு போட்டு நன்கு கிளறவும்.

அதன் பிறகு புதினா போடவும். புதினா வதங்கியவுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.

அதன் பிறகு ப்ரெட்டை போடவும்.
 
கைவிடாமல் கிளற வேண்டும். முட்டை தக்காளி, வெங்காய கலவையுடன் நன்கு சுருண்டு வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.

(பச்சை மிளகாய் இல்லாத காரணத்தினால் வறமிளகாய் போட்டுள்ளேன்).











விரைவில் செய்யக்கூடிய இந்த குறிப்பினை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம். விரும்பி உண்பர்.
மசாலா சுவையுடன் விரும்புவர்கள் இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி செய்யலாம். சுவை வேறு விதமாக இருக்கும்.

                                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சூழ்நிலைகளை அனுசரிக்க பழக்கிக்கொண்டால், இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும். 

சார்லஸ் டிக்கன்ஸ்.

சுரைக்காய் தயிர் பச்சடி


சுரைக்காய் தயிர் பச்சடி
சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. சிலருக்கு இதனை உண்டால் உடல்வலி உண்டாகும். சிறுநீர் கடுப்பு இருப்பவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

சுரைக்காயை நன்கு முற்ற விட்டு, அதில் கயிறை வரிந்து கட்டி நீச்சல் பழக பயன்படுத்துவது வழக்கம். அதனை இடுப்பின் பின்புறமாக கட்டி கிணற்றினுள் இறக்கி விடுவர். உள்ளே செல்லாமல் மேலேயே மிதந்தபடி நீந்தலாம். நாங்கூட அதிலதான் பழகினேன் :))

சில சமயம்  தொளைமேட்டிலிருந்து  எட்டி குதிக்கும் போது சுரைப்புரடை உடைந்து போன நிகழ்வும் உண்டு. ஒருமுறை செய்த புரடையை பத்திரமாக வைத்திருந்து அடுத்து வரும் வருடங்களிலும் பயன்படுத்துவது உண்டு. 
புரடை என்றால் காய்ந்த சுரைக்காய் என்று பொருள்.

 அதே போல் பனைமரத்திலிருந்து பதநீர் இறக்கவும், சுரைக்காயின் ஒருவகையான கும்பசுரைக்காயை பதப்படுத்தியே பயன்படுத்துவர். மேல் பகுதியை ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிவிட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்தால் அழகான சுரைக்குடுவை தயார். 

அதிகமாக பொய் பேசுபவர்களை எங்களூரில், "அடிக்கிற பொய்யும் புரடையும் தாங்க முடில என்று சொல்வார்கள். அவர் ஒரு புரடையர் என்றும் கூறுவர். 

சுரைக்காய் கதையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் :))).



தேவையானபொருட்கள்:



சுரைக்காய்...........200 கிராம் பொடியாக நறுக்கியது

பெரியவெங்காயம்................1சிறியது

தயிர்..............1கப்

வறமிளகாய்.............2

கறிவேப்பிலை.........1இணுக்கு

தாளிக்க:

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணய்

நுணுக்க:

இஞ்சி.......சிறுதுண்டு

பூண்டு........5பற்கள்

சீரகம்........1தேக்கரண்டி

மிளகு...........1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை..........2 இணுக்கு


செய்முறை:

சுரைக்காயை பொடியாக அரியவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரியவும்.
வறமிளாகாயை கிள்ளிவைக்கவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு பொரியவிடவும்.
பின்னர் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையை போட்டு வணக்கவும்.

வணங்கியவுடன் சுரைக்காயையும் போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

அதற்கு பின்னர் தேவையான அள்வு தன்ணீர் விட்டு மூடிவேகவிடவும்.
உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.

நுணுக்க கொடுத்தவற்றை நுணுக்கி பச்சையாக தயிரில் கலக்கவும்.

பின்னர் ஆறிய சுரைக்காயையும் சேர்த்து கலக்கவும்.

சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.  










    இந்த தயிர் பச்சடி நல்ல வாசனையாக இருப்பதுடன், உடலுக்கும் மிகவும் நல்லது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இல்லாதவன் உலகில் வாழமுடியாது. முயற்சிக்காமல் எதையும் செய்ய முடியாது.

_()_()_()_()_

சனி, 31 ஜனவரி, 2015

தயிர் பச்சடி/ ஆனியன் ரெய்த்தா


தயிர்ல எது செய்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். வெறும் தயிர் சாதம் மட்டுமே இருந்தாலும் போதும் எனக்கு. அவ்வளவு தயிர் ப்ரியை நான்.

தயிர் பச்சடிக்கு தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்...........2

புதினா.........10இலைகள்

தக்காளி..........1சிறியது

உப்பு............தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கவும். தடிமனாக இல்லாதிருப்பது நல்லது. சன்னமாக அரிந்த வெங்காயத்தை நீரில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் காரத்தன்மை வெளியேறி பச்சையாக சாப்பிட ஏதுவாக இருக்கும்.

தக்காளியை இரண்டாக வெட்டி உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மிகவும் சன்னமாக அரிந்து கொள்ளவேண்டும்.

புதினா இலைகளை நன்கு அலசிக் கொள்ளவேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு தயிர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கிவிடவேண்டும்.

ப்ரியாணி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.





                                                    ()()()()()()()()()()()()()()()()()

வெள்ளி, 30 ஜனவரி, 2015

மேத்தி வெஜிடபுள் ப்ரியாணி


வெந்தயக்கீரை ப்ரியாணி

வெந்தயக்கீரையில் வெஜ் ப்ரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்ற சோதனை முயற்சி இது. ஆரம்பிக்கும் போது கொஞ்சம் அல்ல நிறையவே யோசனையாக இருந்தது. கசப்பு சுவை இருக்குமோ என்று.
ஆனால் கடைசியில் ரொம்பவே சுவை கூடுதலாக இருந்தது.
அப்புறம் என்ன இனிமேல் எந்த ப்ரியாணினாலும் கண்டிப்பாக வெந்தயக்கீரையும் இடம்பிடிக்கத்தான் போகிறது.

இந்த ப்ரியாணி சமைக்கும் போது எழுந்த வாசனை எல்லோர் மூக்கையும் ஏமாற்றிவிட்டது.  குளித்து விட்டு வெளியில் வந்த மகனும்,  பள்ளி விடுமுறையால் நேரம் ஆவதே தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த (உறக்கத்தைக் கலைக்கும் அளவுக்கு அரோமா) மகளும் ஒரு சேர வந்து, பனீர் பட்டர் க்ரேவியோனு நினைச்சோம் என கோரஸாக கூவிச்சென்றனர்.  எல்லாம் வெந்தயக்கீரை செய்த மாயம் :)))

இந்த கீரை போடும் எண்ணம் வந்தவுடன் உதவிக்கு வந்து பறிச்சு தந்த என்னவர், உள்ளே சிறு வேலையாக நான் சென்ற உடனே பறிச்சாச்சு என்று சொல்லிவிட்டார்.
நானும் நம்பிவிட்டேன், பிறகு பார்த்தால் தண்டுகளுடன் பாதி கீரை பறித்தும், பறிக்காமலும் டஸ்ட் பின்னில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

வெந்தயக்கீரையை ஒவ்வொரு இலையாக பறித்து சமைப்பதுதான் முறை. (எனக்கு தெரிஞ்சு)
இல்ல தண்டோட போடலாம் தப்பில்லை என்று கூறி கத்தியால் கொத்தி எடுக்க தயாரானார்.
இல்லை, இல்லை....இலையை மட்டும் பறிக்கவேண்டும் என்று சொன்ன எனக்கு ஒரே ஷாக் டஸ்ட் பின்னை பார்த்து.

ஆமாங்க என்னதான் சொன்னாலும் வெந்தயக்கீரை பறிப்பது கொஞ்சம் நச்சுப்புடுச்ச வேலைதான்.

சரி என்ன பண்ண அவற்றையெல்லாம் எடுத்துச்சென்று மக்கும் குப்பைகளை வைத்து உரம் தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ( எல்லாம் என் வேலைதான்) அதற்குள் போட்டு விட்டேன். வாங்கிய கீரை குப்பைக்கு போகுதேனு வருத்தப்படாம நம்வீட்டு செடிக்குத்தானே உரமாகிறது என்று மனதை சமாதானம் செய்து கொண்டேன்!!!

சரி வாங்க ப்ரியாணிய எப்படி செய்தேனு சொல்றேன்!!



தேவையான பொருட்கள்:

ப்ரியாணி அரிசி.......500கிராம் (நான் உபயோகித்து இருப்பது ஐ.ஆர்.20 அரிசி)

வெந்தயக்கீரை.......இரண்டு கைப்பிடி அளவு

தக்காளி..............3

பெரிய வெங்காயம்.......2

புதினா ....................ஒரு கைப்பிடி அளவு

கேரட் பீன்ஸ்..........200கிராம்

தயிர் ஆடை..........1 மேசைக்கரண்டி

எலுமிச்சை.......1/2 மூடி

மஞ்சள் தூள்.....1/2 தேக்கரண்டி

உப்பு............தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி..........பெருவிரல் நீளத்திற்கு 1

பூண்டு..........10 பற்கள் 

சோம்பு.........2மேசைக்கரண்டி

பட்டை.........2 அங்குலதுண்டு

கிராம்பு........3

கசகசா........1/2 தேக்கரண்டி

ஏலக்காய்......2

வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)

தாளிக்க:

கல்பாசி.......சிறிது

சோம்பு........1/2 தேக்கரண்டி

ப்ரியாணி இலை....2

கடலை ரீஃபைண்ட் ஆயில்.......2 தேக்கரண்டி

செய்முறை:

கேரட்,பீன்ஸை சதுர துண்டுகளாக அரிந்து கொள்ளவேண்டும்.

 (பீட்ரூட், காலிஃப்ளவர்,பட்டாணி போட்டும் செய்யலாம். என்னிடம் கேரட்,பீன்ஸ் மட்டுமே இருந்தது)

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவேண்டும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

அரைக்க கொடுத்தவற்றை நீர்விடாமல் அரைக்கவும். 3 தக்காளியில் ஒன்றை அதனுடன் போட்டு அரைத்தால் நன்றாக பேஸ்ட் போல வரும்.

புதினா மற்றும் வெந்தயக்கீரையை தனித்தனியாக நன்றாக அலசி அரைகப் தண்ணீரில் போட்டுவைக்க வேண்டும். (அப்பொழுதான் அதிலிருக்கும் மண் மற்றும் தூசிகள் நீரின் அடிப்பாகத்தில் தங்கிவிடும்.
ஓடும் நீரில் அலசுவது பெரிதும் பலன் கொடுக்காது. இலையின் அடிப்பாகத்தில் அப்பியிருக்கும் மண் அப்படியே இருக்க பெரிதும் வாய்ப்புண்டு .) 

அரிசியை கழுவி ஒன்றுக்கு இரண்டு கப் நீர்விட்டு ஊறவைக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சையை பிழிந்து விடவும். 

அடுப்பில் குக்கரை ஏற்றவும். காயந்தவுடன் எண்ணய் ஊற்றி சோம்பு, கல்பாசி, ப்ரியாணி இலை ஆகியவற்றை போட்டு வாசனை வரும்வரை வதக்கவும்.

அரிந்த வெங்காயத்தை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். 

அரைத்த பொருட்களை போட்டு நன்கு கிளறவும். நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டு, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு காய்கறிகள் போடவும்.  அதனையும் நன்கு கிளறிவிட்டு தயிர் ஆடையை சேர்த்த்து நன்கு கிளறவும்.

மஞ்சள்தூள் போடவும்.

பின்பு வெந்தயக்கீரை மற்றும் புதினாவைப் போட்டு கிளறவும்.  தயிர் ஆடை சேர்த்திருப்பதால் நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.

பின்பு ஊறவைத்த அரிசியை போட்டு அளந்து வைத்த அளவு நீரினை ஊற்றி உப்பு போடவும். 

குக்கரை ஹைஃபேளேமில் வைத்து மூன்று சத்தம் விடவும்.

பின்குறிப்பு:

நான் பயன்படுத்தி இருப்பது ஐ.ஆர்.20 அரிசி என்பதாலேயே தீயைக்கூட்டி 3 சத்தம் விட்டுள்ளேன்.
பாஸ்மதி, சீரக சம்பா அரிசிகளுக்கு சத்தம் விடாமல் குறைந்த தீயில் வைத்தே சமைக்கவேண்டும். இல்லையேல் முழுவதும் அடிப்பிடித்து ப்ரியாணி வீணாகிவிடும்.

கார்டன் ஃப்ரஷ் :))















 சுவையும், மணமும், குணமும் நிறைந்த மேத்தி வெஜ்டபுள் ரைஸ் தயார். தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~