வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சர்க்கரை பொங்கல்


 நாம் என்னதான் பக்குவமாக  செய்தாலும் கோவிலில் கொடுக்கும் பொங்கலுக்கு ஈடு இணை எதுவுமில்லை.
 

இது வீட்டில் எளிதாக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல்.

 தேவையான பொருட்கள்:

சோனா மசூரி கைக்குத்தல் அரிசி.....1/2 கிலோ

பாசிப்பருப்பு....200 கிராம்

வெல்லம்...600 கிராம் (விருப்பத்திற்கேற்ப)

ஏலக்காய்............6

முந்திரி, திராட்சை....ஒரு கைப்பிடியளவு

நெய்.......2 மேசைக்கரண்டி

தண்ணீர்....அரிசி, பருப்பினை அளந்து அதற்கேற்றவாறு ஒன்றுக்கு இரண்டு பங்கு வைக்கவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்ட தனியாக இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அளந்து வைத்த நீரினை ஊற்றி 4 விசில் விடவேண்டும்.



அதே சமயத்தில் வெல்லத்தை உடைத்து , பக்கத்து அடுப்பில் நீரை கொதிக்க விட்டு அதில் போட்டு நன்கு கரையும் வரை கரண்டியால் அலாசி விடவும்.

குக்கரில் ஆவி வெளியேறிய பிறகு, அதனை  திறந்து, வெந்த அரிசி பருப்பு கலவையில் கரைந்த வெல்லத்தை வடிகட்டியால் வடித்து ஊற்றவும்.

ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சையினை வறுத்து பொங்கலில் போட்டு கலக்கவும்.

ஏலக்காயை தோல் நீக்கி சிறிது சர்க்கரையுடன் மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும். இதனையும் பொங்கல் கலவையில் போட்டு நன்கு கிளறவும்.
தீ மிதமாக இருந்தால் போதுமானது. பொங்கல் நன்கு குழைந்து,  வெல்ல நீர் நன்கு கலந்து ஓரளவு கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பினை நிறுத்தவும்.

சூடு குறைய குறைய பொங்கல் இஞ்சிவிடும்.

சுவையான சர்க்கரை பொங்கல் தயார் !! விரைவில் செய்து விடலாம்.

  இப்பொங்கலை என் செல்ல மகளின் பிறந்த நாளுக்காக தயார் செய்தேன்.

செல்ல மகளே நீ வயிற்றில் இருக்கும் போது எப்பொழுது வெளி வருவாய் என காத்து நின்றேன். 

குப்புற விழும் வயதில் எப்பொழுது உட்காருவாய் என காத்திருந்தேன். 

உட்காரப் பழகிய வயதில் எப்பொழுது தவழுவாய் என காத்திருந்தேன்.

 தவழும் வயதில் எப்பொழுது நடப்பாய் என காத்திருந்தேன். 

நடந்தாய், குறும்புகள் பல செய்தாய். பள்ளியில் சேர்த்த பிறகுதான் தெரிந்தது, நீ சிறகு முளைத்த பட்டாம்பூச்சி நான் நினைத்த பொழுதெல்லாம் உன்னை என் கரங்களில் சிறை பிடிக்க முடியாதென!! 

பிறகுதான் நினைத்தது மனம், இன்னும் கொஞ்சம் ஆற அமர அனுபவித்திருக்கலாமோவென. 

குட்டிக் குழந்தைகளையும், குறும்பு பூக்களையும் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினையாமல் என் மகனும் இப்படித்தான் பண்ணுவான், என் மகளும் இதே போலத்தான் செய்வாள் என நீங்கள் பிறந்த நொடி கொண்டு சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறேன். 

இவ்விஷயத்தில் தாய்மை வெட்கமறியாது என்பது இதுதானோ....

செல்லமே என்றென்றும் வாழ்வில் வளமுடன் வாழ அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள்!
  
தெய்வத்திற்கு கோடானு கோடி நன்றிகள்!! 

 குறிப்பு:

 பச்சரிசி எதுவாக இருந்தாலும் செய்யலாம். சிறு தானியங்களிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். உடன் தேங்காய் ஒரு மூடி துருவிப் போட்டு செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். ஆனால் அதனை உடனே பயன்படுத்தி விடவேண்டும். காலை செய்து மாலை வரை வைத்திருக்க முடியாது.
சுவையும் கூடுதலாகவே இருக்கும்.

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது: 

'உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை ஒருவருக்கு கொடு'. 
எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

அன்னை தெரேசா

                                                    _(((())))_

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மினி இட்லிப்பூ


 மினி இட்லிப்பூ மூணு கலர் வாங்கினோம். செடி நடும்போதே வெள்ளை அவ்வளவு சீக்கிரம் தளஞ்சு பூ வராதுனு சொன்னாங்க. அதே போலத்தான் பூக்குமா? பூக்குமானு? பாத்த கண்ணும் பூத்து போய்டும் போல காக்க வெச்சு, ஒருநாள் அழகா மொட்டு வந்து பூ வந்துச்சு.
அதுக்கப்புறம் பூப்பேன், ஆனா பூக்க மாட்டேன் என்பது போலவே இருக்கு.

ஆனா பாருங்க ரோஜா நிற இட்லிப்பூ வெச்சதிலிருந்து அழகா பூத்திட்டே இருக்கு.
ஆனா என்ன மயில் நடமாடும் இடம் என்பதால்,  மயில் தன்னோட நீண்ண்ண்ட தோகையால அவ்வப்பொழுது வருடிச் செல்வதால் பூக்கள் சேதாரமாகிப் போய்டுது. செடிக்கும் சேதாரம் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?


கேமரா புடிக்காத அளவுக்கு தன்னோட நீண்ட தோகைய வீசிக்கிட்டே அடிக்கடி வந்து மிளகுதக்காளி செடிய கடிச்சுக்கிட்டே தண்ணி குடுச்சிட்டு போறாய்ங்க...

வெள்ளையம்மா



 இந்தப்பூக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கின்றன. கேட்டுக்கு வெளிய வெச்சிருக்கோம். இந்த மரம் வெச்சு ஏழெட்டு வருசமிருக்கும். ஆக்சுவலா பாத்தீங்கனா, நாங்க கேட்டது வேறொரு பூ மரக்கன்று.
மாத்தி கொடுத்துட்டாங்க. ஆனாலும் இந்த மலர் அதற்கு சற்றும் குறையாமல் அழகுடன் இருக்கு.


 ஏப்ரம் கடைசிலருந்து மே வரைக்கும் பூக்குது. சில சமயம் ஜூன் வரைக்குமே பூக்கள் இருக்கும். மரம் பூரா வண்ணமயமா கொத்து கொத்தா பூக்கள் நிரம்பி இருக்கும்.
இதில ஆரஞ் இட்லி எங்கேனு கேட்கிறீங்களா? அது வெச்சு ஓரிரு பூக்கள் மட்டுமே பூத்தது. பிறகு நிழல்னால செடி வளராமலே போய்டுச்சு. இன்னொரு முறை வாங்கி வெயில் படுமிடத்தில் வெக்கலாம்னு இருக்கோம்.
வெச்சு பூ வந்தவுடனே படம் சேர்க்கிறேன்.:)    

இட்லிப்பூ :)

                                                                     ~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

சேர்ப்பது மிக கடினம், செலவு செய்வது மிக எளிது; பணம் மட்டுமல்ல அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட.

                                                                    _(((())))_

கிர்ணிபழ அகர் அகர்/ Muskmelon Agar Agar

 கிர்ணிபழம் இது அடிக்கடி எங்கவீட்டுல இடம் பெறும் பழம். ரொம்ப ரொம்ப புடிக்கும்.
ஜூஸ் போட்டாலும் ரொம்ப சுவையா இருக்கும்.

அகர் அகர் வாங்கினதுல இருந்து, எதப்போட்டு பண்ணலாம்னு ஒரே யோசனைதான்.
சரியான சமயத்தில இப்பழம் வரவும் இதனைச் சேர்த்து ஒரு சுவையான பதார்த்தம் பண்ணியாச்சு!!

சும்மா சொல்லக்கூடாதுங்க கிர்ணிப்பழ அகர் அகர் சுவை ஆஹா!! ஓஹோ!!
நிச்சயம் இதனைப் பிடிக்கலேனு சொல்பவர்கள் அரிதாகத்தான் இருப்பர். தெகிரிமா ஒரம்பர வந்தா இதனை செய்து அசத்தி மிகுந்த பாராட்டினைப் பெறலாம்.


 தேவையான பொருட்கள்:

கிர்ணிபழம்.........1

அகர் அகர்.....50கிராம் (ஒருபாக்கெட்)

சர்க்கரை.........4 மேசைக்கரண்டி( விருப்பம்போல், பழமே இனிப்பு சுவையுடன் இருப்பதால் அளவாக போட்டால் போதும்)

தண்ணீர்............300மில்லி

செய்முறை:

கிணிப்பழத்தினை இரண்டால வெட்டி, விதைகளை அகற்றி வைக்கவும்.

உள்ளிருக்கும் சதைப்பற்றினை எடுத்து, மிக்ஸியில் போட்டு அடித்து வைக்கவும். நீர் சேர்க்க தேவையில்லை.

காப்பி கெட்டிலில் அகர் அகரை போட்டு நீர் விட்டு, அடுப்பிலேற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

சூடானவுடன் அகர் அகர் கரையத்தொடங்கும் தறுவாயில் சர்க்கரை சேர்க்கவும்.

முழுவதும் கரைந்தவுடன், காப்பி வடியால் வடிகட்டி அதனுடன் அரைத்து வைத்த பழக்கூழை ஊற்றவும்.
ஓரிரு சொட்டுக்கள் ரோஸ் எசன்ஸ் விட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
 ஏலக்காய் ப்ரியர்கள் பொடியாக அரைத்த ஏலப்பொடியை தூவிக்கொண்டால் நல்ல வாசனையாக இருக்கும்.

ஆறியவுடன் எடுத்து ஃப்ரிஸ்ரில் வைக்கவும்.

1 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

முதல்முறை செய்த பொழுது விரைவாக எடுத்ததால் பீட்ரூட் அகர் அகர் கொஞ்சம் பிய்ந்து போய்விட்டது.
இம்முறை பக்குவமாக வந்தது!!.


 குக்கீஸ் கட்டர் கொண்டு தேவையான வடிவங்களில் வெட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒருவாரம் வரை ஃப்ர்ட்ஜில் வைத்து பரிமாறலாம்.
ஃப்ர்ட்ஜில் இருந்து எடுத்தவுடன் சாப்பிடுவது பற்களுக்கு அவ்வளவாக நல்லதில்லை. குளிர்ச்சி குறைவானவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
ஐஸ்க்ரீமுடனாக பழம், கொட்டை வகைகள் சேர்த்து சாப்பிவதும் கூட பற்களை சேதாரமுண்டாக்கும்.
தனியாக ஐஸ்க்ரீம் சாப்பிடும் பொழுது பற்களால் அரைத்து சாப்பிடுவதில்லை, ஆனால் உடன் பழங்களோ, நட்ஸோ சேர்க்கும் பொழுது, குளிர்ச்சி நேரிடையாக பற்களை தாக்குவதால், பற்கள் விரைவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

                                                                ~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்".

சுவாமி. விவேகானந்தர்

                                                            _(((())))_ 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தினை இட்லி, பணியாரம், சந்தவை/ Foxtail Millet Tiffin Varieties




தினையின் பெருமைகள்: 

தேனும் தினைமாவும் முருகக்கடவுளுக்கு மிகவும் பிரசித்தமான நைவேத்தியம். பழனி போனா தினைமா வாங்காம வந்ததே இல்லை.

தினை மாவினை பூப்படைந்த பெண்களுக்கு திரட்டி(சடங்கு) செய்யும் பொழுது பச்சஓலை குடிசையுனுள் விட்டு , தினை மாவினை இடித்து வெல்லப்பாகினை சேர்த்து உருண்டைகளாக உருட்டி கொடுப்பது வழக்கம். இன்றும் இப்பழக்கம் பின்பற்றப்பட்டே வருகிறது. ஒரு மாற்றம் என்னனா, உரலில் இடிப்பதற்கு பதிலாக மிக்ஸியில் பொடித்து எடுக்கப்படுகின்றது.

தினை உடல்சூடு என்பதால் கர்ப்பகாலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது.
ஆனா குழந்தை பெற்றபின்பு தினை உணவை வழங்குவது, உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. 


 தினை இட்லி:

 தேவையான பொருட்கள்:

தினை.........4 கப்

உளுந்து........1 கப்

வெந்தயம்...1 மேசைக்கரண்டி

செய்முறை:

தினையை நன்கு கழுவி 4 மணிநேரம் மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்க வேண்டும்.

உளுந்தையும்  வெந்தயத்தையும் நன்கு கழுவில் மூழ்கும் வரை நீர் விட்டு ஃப்ரிட்ஜில் தினை ஊறவைக்கும் பொழுதே ஊறவைத்து விடலாம்.

மிக்ஸியில் (இந்த முறை மிக்ஸியில்தான் அரைத்தேன்) தினையைப் போடும் முன்பாக நன்கு அரித்து,  சிறு சிறு கற்கள் இல்லாமல் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

உளுந்தை போட்டு பாதி அரைந்தவுடன் இரண்டு ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்க வேண்டும்.
மாவு நன்கு உபரியாகும்.

அரைத்த மாவினை உப்பு போட்டு கலக்கி எட்டு மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மாவு அரைத்தவுடன் எடுத்து வைக்கும் பாத்திரத்தில் அரைவாசி அளவு இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம்.
இல்லையேல் மாவு பொங்கி வழிந்துவிடும்.

இரவு அரைத்து வைத்தால் காலையில் இட்லி செய்ய ஏதுவாக இருக்கும்.

இட்லி பாத்திரத்தில் நீர்விட்டு, தட்டில் துணியை ந்னைத்து இறுக பிழிந்து போட்டு, குழிகளுக்குள் மாவினை ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.











 தினை இட்லி தயார்!!

தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்!!


தினை பணியாரம்:













 தேவையான (இட்லிக்கு அரைத்த மாதியே) மாவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் காய்ந்த வடசட்டியில் ஒரு ஸ்பூன் கடலெண்ணய் விட்டு அதுவும் காய்ந்தவுடன் கடுகு, கடலைப் பருப்பு போட்டு பொரியவிட்டு அரிந்தவற்றைப் போட்டு நன்கு வதக்கி மாவில் கொட்டி நன்கு கலக்க வேண்டும். தேவையான் அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கலக்கிய மாவினை ஸ்பூனால் ஊற்ற வேண்டும். மேலே சிறிது நெய்விடவேண்டும். (விரும்பினால்)

மூடிவைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

பின்பு திருப்பி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.
சுவையான தினை பணியாரம் தயார். விரும்பிய சட்னி, குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



தினை சந்தவை:

2 கப் தினையை கல்நீக்கி, நன்கு களைந்து மூழ்கும் வரை நீர்விட்டு 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு போட்டு கலக்கி, உடனே இட்லி பாத்திரத்தில் ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுத்து சந்தவை மரத்தில் பிழிந்து எடுக்க வேண்டும்.
இனிப்பு சந்தவையாக வேண்டுமானால் தேங்காய் பால், மற்றும் நெய்யும் சர்க்கரையும் சேர்த்து உண்ணலாம்.
ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. தினை கெட்டி தன்மை உடையதாக இருப்பதன் காரணத்தால் பிழிவது கொஞ்சம் சிரமமாக இருந்தது.

இவையாவும் தினையரிசி கொண்டு தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளாகும்.

தினையரிசி கொண்டு இன்னும் பலப்பல உணவு பதார்த்தங்கள் செய்யலாம். இனி வரப்போகும் வாரங்களில் அவற்றைப் பார்ப்போம்!.

                                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான். அதை உயிராக மதித்து போற்றுங்கள்.

---கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

                                                        _(((())))_
                                                         

புதன், 5 ஆகஸ்ட், 2015

பொரியல் பொடி/கறிப்பொடி


பொரியல் பொடி, அனைத்து பொரியலுக்கும் நான் இதனைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கிழங்கு மற்றும் காய் வகைகளுக்கு  பயன்படுத்துவதுண்டு.
குறிப்பாக சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வாழைக்காய், புடலங்காய், கேரட்பீன்ஸ் பொரியல்களுக்கு போடுவதுண்டு. மிகவும் ருசியாக இருக்கும்.
வரப்போகும் நாட்களில் மற்ற காய்கறிகளுக்கும் அரை தேக்கரண்டி அளவு போடலாம் என நினைத்திருக்கிறேன் :).

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு.........2 மேசைக்கரண்டி

உளுந்தம்பருப்பு....1 மேசைக்கரண்டி

வறமிளகாய்.....10 (காரத்திற்கேற்ப)

சீரகம்....1/2 தேக்கரண்டி

வறமல்லி/தனியா...1/4 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் முதலில் கடலைப்பருப்பை போட்டு பின்னர் உளுந்தம்பருப்பு போட்டு நன்கு துலாவி விடவும்.
அதனுடன் வறமிளகாய் போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். தீயவிடக்கூடாது.

அதன் பிறகு சீரகம், மல்லி போட்டு ஒரு ஓட்டு ஓட்டி அடுப்பை நிறுத்தவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் நைசாக அரைத்து ஆறவைத்து(மிக்ஸியில் போட்டதால் பொடியில் சூடு இருக்கும்) பாட்டிலில் போட்டு வைக்கவும்.



இட்லி சாம்பார் செய்யும் பொழுது இதனை ஒரு தேக்கரண்டி போட்டால் நன்கு வாசனை மற்றும் ருசி இருக்கும்.

                                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் நாக்கைப் பொறுத்ததே. மனதால் நல்லதைச் சிந்தியுங்கள், நாவால் நல்லதைப் பேசுங்கள்.

--கிருபானந்த வாரியார் சுவாமிகள்

                                                           _(((())))_

திங்கள், 27 ஜூலை, 2015

உயர்திரு.Dr.A.P.J. அப்துல்கலாம் ஐயா!!



பாரதத்தாயின் மணிமகுடத்திலிருந்து ஒரு இரத்தினம் தன் அக்னி சிறகினை மெல்ல விரித்து பறந்து சென்று வானத்து நட்சத்திரமாய் மாறிவிட்டது :((( 

கனவு காணுங்கள் அக்கனவினை மெய்ப்படச் செய்யுங்கள் என இலட்சோப இலட்சம் மாணவர்களுக்கு எழுச்சியூட்டிய கனவு நாயகன் இன்று உறங்கச் சென்றுவிட்டார்.
அவரின் கனவுக்கு முழுவடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பினை இன்றைய இளம் குருத்துக்களிடம் விட்டுச்சென்றுள்ளார்.
அவரின் கனவு மெய்ப்படச் செய்ய வேண்டிய கடமை அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் உண்டு!!

குடியரசு தலைவரின் மாளிகை என்பது சாமான்ய மக்களுக்கு தூரத்து காட்சியே என்ற நிலையை மாற்றியவர்.
நேர்மை, எளிமை, உற்சாகம் இவற்றின் ஊற்றுக்கண்ணாய் விளங்கியவரின் உடல் துயிலுற்றாலும், ஆன்மா விழித்துக்கொண்டும் செயலாற்றிக் கொண்டும்தான் இருக்கும்.

பிறப்பென்றிருந்தால் இறப்பும் உண்டு, ஆனால் அந்த நிகழ்வு அனைவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அமையும்.
தங்களின் உயிர் பிரியும் தருவாயிலும், தாங்கள் ஆற்றிய கடமையை காலம் என்றென்றும் மறவாது.

தங்களுக்கு எங்களின் வீரவணக்கம் ஐயா!!





                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வது!!

-- Dr. A.P.J. அப்துல்கலாம்

                                              _((((())))))_

வியாழன், 23 ஜூலை, 2015

நிலக்கடலை சுண்டல்/ வேர்க்கடலை சுண்டல்/ Peanut Sundal





பச்சக் கல்லக்காயை பறித்து வேகவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான். ஆனால் எல்லா பருவங்களிலும் பச்சக்கல்லக்காய் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாகத்தான் பச்சையாக இருக்கும். பிறகு காயவைத்து விடுவார்கள். இல்லையேல் பூஞ்சாணம் பிடித்து காய்கள் கெட்டுப்போய்விடும்.

அதுக்காக பச்சக்கல்லை சாப்பிடும் ஆசை போய்விடுமா என்ன?
வருடம் பூராவும் பச்சக்கல்லை சாப்பிடணுமா? (இது ஏதோ மரகதக் கல், மாணிக்ககல்னு நினைக்கப்படாது. கடலைக்காயை நாங்கெளாம் கல்லக்காய்னுதான் சொல்வோம்.)
அதுக்கு ஒரே வழிதாங்க இருக்கு, காயவெச்ச வேர்க்கடலை பருப்புகளை குறைந்தது 4 மணிநேரம் நீரில் ஊறவைத்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுத்தா வேகவைத்த வேர்க்கடலை தயார்!!
95% அதே ருசி கிடைத்து விடுகிறது. என்னக்கேட்டா 100/100 அதே ருசினு சொல்வேன்.
ஆனா பச்சக்கடலைய பலவிதமா ஆராய்ச்சி பண்ணி சாப்பிட்டதில ஊசி போடாத மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு அதில்  5%  குறைவாகத்தான் தெரி(து)யும்!!

சரி வாங்க படத்துடன் கூடிய குறிப்புக்கு போவோம்:



இந்த கப்லருந்து அப்பிடியே வேர்க்கடலைய எடுத்து ஒவ்வொண்ணா வாயில போட்டுக்கிட்டே வந்தா குறிப்பு  வ(வெ)ந்துடும்.







 நான் வாங்கியது ஔவை பிராண்ட் நிலக்கடலை, நல்லாவே சுத்தம் செய்து தரமான நிலக்கடலைகளாவே விற்பனை செய்கிறார்கள். ஒரு பாகெட்ல ஒரு சொத்த கடலை கூட இல்லீங்!!


 கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்கவும்.

நல்லா ஊறிடுச்சு பாருங்க!!

ஊறின கடலையை குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு, 1/2 தேக்கரண்டி கல் உப்பு 4 லிருந்து 5 விசில் விட்டு வேகவைக்க வேண்டும்.
வெந்த பிறகு அதிலிருக்கு நீரினை இருத்துவிட வேண்டும்.
படங்கொஞ்சமல்ல நிறையவே ஆடிடுச்சு
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன் கடலெண்ணய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

பொடியாக நறுக்கிய  இரண்டு மிளகாய்பழம்,  10 சின்ன வெங்காயம், 2 இணுக்கு கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

 வதங்கும் பொழுதே சிறிது உப்பு (பொடி உப்பு) ஏற்கனவே கல் உப்பு போட்டிருக்கு, ஆதலால் தேவைக்கு போடவும். அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது. கூடவே அரை தேக்கரண்டி அளவு சாட் மசாலா போட்டு வதக்கி, வேகவைத்த கடலையைப் போட்டு கிளறிவிடவும்.
பின்பு  துருவிய அரைமூடி தேங்காயைப் போட்டு நன்கு கிளறிவிடவும்.
 தேங்காய் போட்ட பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்க வேண்டாம். எப்பொழுதும் தேங்காய் பச்சையாக சாப்பிட்டால் நல்லது. அதுவே வறுத்து சாப்பிடும் பொழுது உடலில் கொழுப்பு தங்கும் வாய்ப்புள்ளது.


 சூடான சுவையான வேர்க்கடலை சுண்டல் தயார்!!

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றதொரு சத்துள்ள உணவு.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உண்மையை நேசி; பிழையை மன்னித்து விடு.

                                                                   _((()))_