புதன், 1 ஏப்ரல், 2015

காலிஃப்ளவர் கறி



 காலிஃப்ளவர் கறி மிகவும் எளிதான ஒன்று.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்....1

பெரியவெங்காயம்......1

தக்காளி...........1

இஞ்சி, பூண்டு விழுது...........1 மேசைக்கரண்டி

மல்லிபொடி.........2 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி........1 1/2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

கரம்மசாலாப்பொடி......1 தேக்கரண்டி

கடலை எண்ணைய்....1 மேசைக்கரண்டி

தாளிக்க.

சீரகம்........1 தேக்கரண்டி

 கறிவேப்பிலை... 1 இணுக்கு

விருப்ப பட்டால் விதைகள் அகற்றிய பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கலாம்.


செய்முறை:


காலிஃப்ளவரை தனித்தனி இதழ்களாக பிரித்து, நீரில் அலசவும்.

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவிடவும்.

கொதித்த நீரை அடுப்பிலிருந்து இறக்கிய பின்பு, உப்பு மஞ்சள்தூள் போட்டு, அதனுள் அலசிய இதழ்களை போடவும். மூழ்கும் அளவிற்கு நீர் இருக்கவேண்டும்.
தட்டு போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.

பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன், எண்ணைய் ஊற்றவும். காய்ந்த எண்ணைய்யில் சீரகம் போட்டு பொரியவிடவும்.

பெரியவெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

தக்காளி போட்டு குழையவிடவும்.

பொடி வகைகள் போட்டு கிளறி, பின்பு நீரில் இருக்கும் காலிஃப்ளவரை நீரில்லாமல் எடுத்து போட்டு நன்கு கிளறவும்.

நீரை வடிக்காமல், அரிக்கியால் அரித்து எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் ஏதேனும் சிறு புழுக்கள், பூச்சிகள் இருந்தால் அடியில் நிற்கும். அப்படி இருந்தால் மீண்டும் ஒரு முறை பச்சதண்ணியில் அலசி போடவும்.

கால் டம்ளர் நீர்விட்டு, தீயை மிதமாக வைத்து வாணலியை மூடி வேகவிடவும்.

வெந்த பின்பு மல்லிதழை தூவி பரிமாறவும்.


நான் ஊறவைத்து வேகவைத்த சன்னா சேர்த்துள்ளேன். சுவையாக இருந்தது.
சன்னா சேர்த்தது

இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறியது
மதியம் செய்தது மீதமாகிவிடவே, மாலையில் அதனுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும். சுவையான காலிஃப்ளவர் முட்டைக் கறியும் கிடைத்தது.

ஒரே ஜீன்ஸுக்கு 2,3 விதமா டாப் எடுக்கிறதில்ல, அது போலத்தான்
இதுவும் :)))).

                                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

ஒருவர் தான் எப்போதுமே எந்த தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று அர்த்தமாகும்.

ஐன்ஸ்டீன்.

                                                                      _()()()()_
                                                                          




2 கருத்துகள்:

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்