வெள்ளி, 13 மார்ச், 2015

புதினா பராத்தா

புதினா சப்பாத்தினு போடாம ஏன்? புதினா பராத்தானு போடுறீங்கனு என் மக்கட்செல்வங்கள் வினவினாங்க!!

சப்பாத்தினு சொல்றதை ஸ்டைலா பரா...த்தானு சொல்றேனு சொல்லிக்கிட்டேன்.

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு.............2 கப்

கடலை எண்ணைய்..........1 தேக்கரண்டி

உப்பு.........தேவையான அளவு

புதினா.......இரண்டு கைப்பிடியளவு (தோராயமாக)

செய்முறை:

கோதுமை மாவுடன், உப்பு எண்ணைய் கலந்து வைக்கவும்.

புதினாவை நன்கு கழுவி, பொடியாக அரிந்து மாவுடன் கலக்கவும். நான் பொடியாக நறுக்கவில்லை. இலைகள் அளவினில் சிறியதாக இருக்கவும் ஓரளவிற்கு அரிந்து போட்டேன்.

புதினாவையும் மாவுடன் கலந்து நன்கு இளக்கமாக பிசையவும்.

சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து வைக்கவும்.

புதினா சப்பாத்தி என்கிற பராத்தா தயார்.

தயிர் பச்சடி அல்லது குருமா வகைகளுடன் சாப்பிடலாம். எங்கள் வீட்டில் பாசிப்பருப்பும், பீர்க்கங்காயும் போட்ட குழம்பு வைத்தேன். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.













 அவசரமாக சுட்டதினால் வட்டமாக வெட்டாமல் அப்படியே சுட்டு எடுத்துவிட்டேன். அதனால்தான் உலக நாடுகளின் வரைபடங்களை நீங்கள் கண்ணுற முடிந்தது :))


பீர்க்கங்காய் போட்ட பச்சபயிறு குழம்பு, பொரியல் சேனைக்கிழங்கு.

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

ஆயிரம் முறை சிந்தியுங்கள், ஒருமுறை முடிவெடுங்கள்.

                                                               _()_()_()_()_

வியாழன், 12 மார்ச், 2015

தக்காளி கடைசல்


தக்காளி கடையறது எங்கள் ஊர்களில் மிகவும் பிரசித்தமான ஒன்று. ஆத்தர அவசரத்துக்கு இதுதான் கைகொடுக்கும் கை :))
திருமண விசேசங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், காலையில் முகூர்த்தம் முடிந்து வந்து பொறுமையாக சமையல் கவனிக்க நேரம் இருக்காது.
அப்பொழுதெல்லாம் இந்த கடைசல் கை கொடுக்கும். சொற்ப நேரத்தில் சமைத்து விடலாம். ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்!!!!!.
இதனை என் மகனோ, மகளோ படிக்க நேர்ந்தால் அவர்கள் நினைப்பது இதுவாகத்தான் இருக்கும். " கல்யாணத்துல பூசணி அல்வா முதல் வெஜ் பணியாரம் வரை ஒன்றுவிடாமல் சாப்பிட்டு விட்டு எங்களுக்கு போனா போகுதுனு இப்படி சமைச்சதை எப்படி பெருமையா எழுதி இருக்காங்க!! னு நிச்சயம் நினைப்பார்கள்:))))

தேவையான பொருட்கள்:

தக்காளி...............5

வறமிளகாய்.........1 (காரத்துக்கேற்ப)

சி.வெங்காயம் அல்லது பெ. வெங்காயம்........1

கறிவேப்பிலை......2 இணுக்கு

சீரகம்............1 மேசைக்கரண்டி

தாளிக்க:
கடலை எண்ணை........1/2 மேசைக்கரண்டி.
கடுகு, கடலைபருப்பு, வெ.உளுந்து பருப்பு.











செய்முறை:

வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவேண்டும். தக்காளியின் காம்பு இருந்த பகுதியை அரிந்து எடுத்துவிடவேண்டும்.

வறமிளகாயை சிறியதாக கிள்ளி வைக்கவேண்டும். விதைகளை உதிர்த்துவிட்டு வைக்கவேண்டும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு, வெ.உளுந்து பருப்பு போட்டு பொரிந்தவுடன் சீரகம் போடவேண்டும்.
உடனே வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பின்பு வறமிளகாயை போட்டு வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியை போட்டு , தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.

அடுப்பை மிதமாக வைத்து, வாணலியை மூடி வைக்கவேண்டும். தக்காளி வெந்து நீர்விட ஆரம்பிக்கும்.

5 நிமிடங்கழித்து நன்கு கிளறிவிடவேண்டும்.

பருப்பு மத்தினால் நன்கு கடைந்து விடவேண்டும்.

கடைந்த பிறகு கொஞ்சமாக நீர்விட்டு கொதிக்க விடவேண்டும்.

பின்பு மல்லிதழை தூவி இறக்கிவிட வேண்டும்.

சூடான சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

இதில் பொடியாக அரிந்த பூண்டு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.

தாளிக்கும் போது சீரகத்திற்கு பதிலாக சோம்பு சேர்த்தால் வேறு சுவை கிடைக்கும்.

பச்சை மிளகாய் சேர்த்தால் சுவை வேறுபடும்.

இதனை அப்படியே ஆறவைத்து மிக்ஸியில் ஒரு அடிமட்டும் அடித்து எடுத்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

மிளகாய் ஒன்று சேர்த்ததே போதுமான காரமாக இருந்தது. ஏனெனில் நன்கு கடையும் போது, மிளகாய் காரம் கூடக்கிடைக்கும்.

வெங்காயம் சேர்க்காமல் வெறும் தக்காளியை இது போன்று செய்து, வெளியூர்களுக்கு போகும் போது சப்பாத்தியுடன் எடுத்துச்செல்லலாம். சீக்கிரம் கெட்டுப்போகாது.

 தாளிக்கும் போது எல்லா உணவு பொருட்களுக்குமே பெரும்பாலும் சீரகம் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை, மற்றவர் இறந்துவிட்டார்.

                                                          _()_()_()_()_


புதன், 11 மார்ச், 2015

காளான் சுக்கா



தேவையான பொருட்கள்:

காளான்..........2 பாக்கெட்

பெரியவெங்காயம்.......1

தக்காளி..........1

மல்லிபொடி........1 மேசைக்கரண்டி

கரம்மசாலா பொடி........1/2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது.........1 மேசைக்கரண்டி

தனிமிளகாய் பொடி......1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

கறிவேப்பிலை...........2 இணுக்கு

குடைமிளகாய்........1 (விருப்பட்டால்)

மல்லி தழை.....கைப்பிடியளவு

கஸூரி மேத்தி.........1 தேக்கரண்டி

சோம்பு........1/4 தேக்கரண்டி

பட்டை.......சிறுதுண்டு

கிராம்பு........2

ஏலக்காய்......விரும்பினால்

உப்பு தேவையான அளவு

எண்ணைய் ........1 மேசைக்கரண்டி


செய்முறை:

முதலில் காளானை அதன் மேலுள்ள கருப்பு துகள்கள் போகும்படி கழுவி துடைத்து, நான்காக வெட்டி வைக்கவும்.

பெரியவெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

குடைமிளகாயை சதுரதுண்டுகளாக நறுக்கி, லேசாக எண்ணைய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும். 5 நிமிடம் வதக்கினால் போதும்.

வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன், பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

நன்கு வாசனை வந்த பிறகு தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.

பொடிவகைகளை சேர்க்கவும்.

பின்னர் காளானை போட்டு வதக்கவும்.  உப்பு இந்த சமயத்தில் போடவும்.

வாணலியை மூடி வைக்கவும். தீ மிதமாக இருக்கட்டும்.

7 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறிவிடவும். நீர் சுண்டிவிடுமாயின் கொஞ்சமாக நீர்விட்டு, வதக்கிய குடைமிளகாயை போடவும்.

பின்னர் கஸூரி மேத்தியை கைகளால் அரக்கி போடவும்.

உப்பு சரி பார்த்து, மல்லி தழை தூவி நன்கு கிளறிவிட்டு  இறக்கவும்.

வாங்க போட்டோ பாக்கலாம்:





கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை)


தயிர் சாதம், புலாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறிய இலட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய இலட்சியத்திற்காக முயற்சி செய்வது மேலானது.

ஸ்ரீ அன்னை.

                                                       _()_()_()_()_

செவ்வாய், 10 மார்ச், 2015

நிலவேம்பு கஷாயம்



நிலவேம்பு கஷாயத்தை கடந்த சிக்குன்குணியா சீசனில் தொடர்ந்து குடித்து வர, எங்கள் வீட்டில் யாருக்கும் அந்நோயின் தொல்லை தொற்றவில்லை.
நிலவேம்பு பொடியின் கசப்பு தன்மையை நினைத்தாலே அக்கசப்பு நாவில் உலாவருவது போன்று தோன்றும்.
எட்டிக்கசப்பு என்று அதிக கசப்புக்கு உதாரணம் கூறிக் கேட்டிருப்போம். ஆனால் நிலவேம்பு கசப்பானது அதையும் தாண்டுமோ என்று நினைக்கவைக்கும் அளவு இருக்கிறது.
 அப்பொடி பாக்கெட்டை திறந்தாலே, நாசியில் ஏறிய கசப்பு, தொண்டை வரை பயணம் செய்வதை நாம் உணரமுடியும்.

நோயின் தாக்கமும், அதனால் உண்டாகும் பின்விளைவும் இக்கசப்பினை மறுக்காமல், மறக்கசெய்து குடிக்கவைத்து விடும்.
இன்னும் கூட எனக்கு தெரிந்த ஒருவர் இந்நோயின் தீவிரத்தால் நடை தளர்ந்து போய்தான் காணப்படுகிறார். கை, கால், விரல் எலும்பு இணைப்புகள் அனைத்தும்  வலியினால் நோகடிக்கின்றது எனவும் கூறுவார்.

தற்போது எங்கள் ஊரில் பன்றிக்காய்ச்சலின் தீவிரம் தலைதூக்கியுள்ள இவ்வேளையிலே இப்பொடியினை பயன்படுத்த துவங்கியுள்ளோம்.

நோய் தடுப்பு முறைகளை நாம் துவக்குவோம், அதற்குமேல் வருவதும், வராமல் போவதும் கடவுளின் கையில்தான் உள்ளது.

இதற்கு முன் வாங்கியது பொடியாக இருந்தது. ஆனால் இந்த முறை வாங்கியது  படத்திலுள்ளது போல, பட்டைகளும், வேர்களும்  கலந்த கலவையாக இருக்கின்றது.

செய்முறை:

ஒரு மேசைக்கரண்டி பொடி எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே எடுத்திருப்பது அரை மேசைக்கரண்டி மட்டுமே, இன்றுதான் ( ஓரிரு வருடங்களுக்கு பிறகு) முதல்முறை என்பதால் நானும், என்னவரும் முதலில் குடித்துப்பார்த்து பின்னர் மகனுக்கும், மகளுக்கும் கொடுக்கலாம் என நினைத்திருக்கிறோம்.

2 டம்ளர் தண்ணீரில் இப்பொடியை போட்டு, 1 டம்ளராக சுண்டக்காய்ச்சி, ஆளுக்கு 1/2 டம்ளர் குடித்துவிட்டோம். கசப்புதான் பொறுக்க முடில :(







 எச்சரிக்கை:
மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே இதனை உட்கொள்ளவேண்டும். 
கண்டிப்பாக கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தகுந்த மருத்தவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 படித்ததில் பிடித்தது:

நாம் அனுபவிக்கும் எல்லாப் பொருட்களும் இயற்கையிடமிருந்தே நமக்கு கிடைக்கின்றன. 
                                                    _()_()_()_()_

மயிலே!! மயிலே!! இறகொண்ணு போடு!!


 ஒரு நாளு,  இ னு கேளுங்க.. ஒரு நாளு நானு கிச்சன்ல வேலையா இருந்தேன். அப்ப திடீர்னு ஒரு சத்தம், விர்ர்னு, நாங்கூட ஏதோ இந்த பறக்கும் தட்டு, பறக்கும் தட்டுனு சொல்றாங்களே அதோ என்னமோனு குபீர்னு ஜன்னல் வழியா பாத்தா, ஜிவ்வ்வ்வ்வ்வ்னு பறந்து வந்து உக்காந்தாங்க இந்த மயிலக்கா, இல்லீங் மயிலண்ணன்.

அப்பரம் என்ன கேமராவும் கையுமா அப்பிடியே எடத்த உட்டு அசையாம நின்னுட்டம்ல.




வெளிய நடலாம்னு வாங்கின அரளிப்பூச்செடியவே உத்து பாத்தாங்க

தலைய சாய்வா வெச்சு வேறென்ன தேறும்னு பாத்தாங்க

வந்த களப்பு தண்ணி குடிக்கலாமானு யோசனைல இருந்தாங்க


குடிச்சுதான் பாப்பமேனு

இந்தூட்டு அம்மிணி ரொம்ப நல்லவ, நல்லதண்ணியாத்தான் இருக்கோணும்னு நினைச்சு குடிச்சாங்க :))

நின்னு நோட்டமிட்டாங்க, எதாவது தேறுமா?


அங்க என்னமோ கண்ணுக்கு தட்டுப்படுதே!!




சுத்தி சுத்தி வந்தீக!!

கேமராவ நிறுத்து!!!!

ஐ!! நந்தியாவட்டை, ஆனா என்னோட கொண்டையவிட அழகா என்ன?
ச்சே ஒரே போர்ப்பா..

மயில் நட நடந்து கெளம்பிட்டாங்க



இந்த படம் பார்த்த குட்டீஸ்க்கெல்லாம் ஒரு பாடல். நான் சின்ன வயசில பாடியது (படிச்சது :))

                                                      மயில் ஒன்று ஆடுது
                                                      மந்தியெல்லாம் கூடுது
                                                       குயில் ஒன்று பாடுது
                                                      குருவியெல்லாம் கூடுது
                                                      மயிலப் பாத்து குயிலப் பாத்து
                                                      மந்தி தலைய ஆட்டுது!!

ரொம்ப வருஷம் முன்னாடி படிச்சதினால, இதில் குற்றங்குறை ஏதேனும் இருந்தால் பொருத்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
வந்த சோலிய முடிச்சாச்சுனு.... ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு இருந்த பெரிய வெங்காயத்தாள முடிச்சுப்புட்டுள்ள கெளம்புனாங்க..அவ்வ்வ்வ்வ்


                                                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.


_()_()_()_()_