தக்காளி கடையறது எங்கள் ஊர்களில் மிகவும் பிரசித்தமான ஒன்று. ஆத்தர அவசரத்துக்கு இதுதான் கைகொடுக்கும் கை :))
திருமண விசேசங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், காலையில் முகூர்த்தம் முடிந்து வந்து பொறுமையாக சமையல் கவனிக்க நேரம் இருக்காது.
அப்பொழுதெல்லாம் இந்த கடைசல் கை கொடுக்கும். சொற்ப நேரத்தில் சமைத்து விடலாம். ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்!!!!!.
இதனை என் மகனோ, மகளோ படிக்க நேர்ந்தால் அவர்கள் நினைப்பது இதுவாகத்தான் இருக்கும். " கல்யாணத்துல பூசணி அல்வா முதல் வெஜ் பணியாரம் வரை ஒன்றுவிடாமல் சாப்பிட்டு விட்டு எங்களுக்கு போனா போகுதுனு இப்படி சமைச்சதை எப்படி பெருமையா எழுதி இருக்காங்க!! னு நிச்சயம் நினைப்பார்கள்:))))
தேவையான பொருட்கள்:
தக்காளி...............5
வறமிளகாய்.........1 (காரத்துக்கேற்ப)
சி.வெங்காயம் அல்லது பெ. வெங்காயம்........1
கறிவேப்பிலை......2 இணுக்கு
சீரகம்............1 மேசைக்கரண்டி
தாளிக்க:
கடலை எண்ணை........1/2 மேசைக்கரண்டி.
கடுகு, கடலைபருப்பு, வெ.உளுந்து பருப்பு.
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவேண்டும். தக்காளியின் காம்பு இருந்த பகுதியை அரிந்து எடுத்துவிடவேண்டும்.
வறமிளகாயை சிறியதாக கிள்ளி வைக்கவேண்டும். விதைகளை உதிர்த்துவிட்டு வைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு, வெ.உளுந்து பருப்பு போட்டு பொரிந்தவுடன் சீரகம் போடவேண்டும்.
உடனே வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பின்பு வறமிளகாயை போட்டு வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு , தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
அடுப்பை மிதமாக வைத்து, வாணலியை மூடி வைக்கவேண்டும். தக்காளி வெந்து நீர்விட ஆரம்பிக்கும்.
5 நிமிடங்கழித்து நன்கு கிளறிவிடவேண்டும்.
பருப்பு மத்தினால் நன்கு கடைந்து விடவேண்டும்.
கடைந்த பிறகு கொஞ்சமாக நீர்விட்டு கொதிக்க விடவேண்டும்.
பின்பு மல்லிதழை தூவி இறக்கிவிட வேண்டும்.
சூடான சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதில் பொடியாக அரிந்த பூண்டு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.
தாளிக்கும் போது சீரகத்திற்கு பதிலாக சோம்பு சேர்த்தால் வேறு சுவை கிடைக்கும்.
பச்சை மிளகாய் சேர்த்தால் சுவை வேறுபடும்.
இதனை அப்படியே ஆறவைத்து மிக்ஸியில் ஒரு அடிமட்டும் அடித்து எடுத்தாலும் சுவை நன்றாக இருக்கும்.
மிளகாய் ஒன்று சேர்த்ததே போதுமான காரமாக இருந்தது. ஏனெனில் நன்கு கடையும் போது, மிளகாய் காரம் கூடக்கிடைக்கும்.
வெங்காயம் சேர்க்காமல் வெறும் தக்காளியை இது போன்று செய்து, வெளியூர்களுக்கு போகும் போது சப்பாத்தியுடன் எடுத்துச்செல்லலாம். சீக்கிரம் கெட்டுப்போகாது.
தாளிக்கும் போது எல்லா உணவு பொருட்களுக்குமே பெரும்பாலும் சீரகம் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை, மற்றவர் இறந்துவிட்டார்.
_()_()_()_()_









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்