செவ்வாய், 7 ஜூலை, 2015

நல்ல முட்டையா ? கெட்ட முட்டையா?

 முட்டைகளை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்று.

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனுள் முட்டைகளைப் போட்டால் நீரில் மூழ்கும் முட்டை நல்லது.

மேலே மிதக்கும் முட்டை கெட்டது.
நீரில் மிதக்கும் கெட்ட முட்டை!!

ஐந்து முட்டைகளில் இரண்டு மட்டுமே நீரில் மூழ்கி மூச்சடக்கி தான் நல்லவ(வி)ன் என சாதிக்கிறது!! :))
ஒவ்வொரு முறை முட்டையை நேரிடையாக உடைத்து ஊற்றும் படியான பதார்த்தங்கள் செய்தால் கட்டாயம் இது போல் பரிசோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வேக வைக்கும் பொழுது பொதுவாக பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை, ஏனெனில் நீரில் போடும் பொழுது நமக்கு வித்யாசம் தென்பட்டு விடும்.
கேக் மற்றும் ஆம்லட் போடும் பொழுதும் இதே முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சற்று முன் வாங்கியதுதானே, ஒரு நாள் தானே ஆயிற்று என நினைத்து குழாய் நீரில் கழுவி விட்டு அப்படியே உடைத்து ஊற்றுவது நல்லதல்ல.

அதே போல் சிறு குழந்தைகளுக்கு அதாவது எட்டு, ஒன்பது மாதக்குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாம் என சொல்கிறார்கள். ஆனால் அவ்விதம் கொடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையை நானும் அனுபவித்து என் தோழிகளும் அனுபவித்த நிலையும் உண்டு.
அதுவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு சென்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்.
இதனை ஒரு கூடுதல் தகவலாகவும், என் அனுபவ நிகழ்வாகவும் இங்கு பதிந்திருக்கிறேன். 

                                                    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீய பழக்கத்தை வேரோடு களைந்து விடுங்கள்.

                                                           _(((())))_                                                         

சனி, 4 ஜூலை, 2015

மொறு மொறு வெண்டக்கா



மொறு மொறு வெண்டக்கா செய்வது மிகவும் எளிது. 

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்.........15

மிளகாய்தூள்...........1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

கரம்மசாலா பொடி.......1/2 தேக்கரண்டி

உப்பு...............தேவையான அள்வு

க்டலை மாவு....... 2 தேக்கரண்டி

கடலை எண்ணைய்... பொரிப்பதற்கு தேவையான அளவு

கறிவேப்பிலை........ 4 இணுக்கு

செய்முறை:

வெண்டைக்காய்களை சுத்தமாக கழுவி, காம்பு மற்றும் நுனிப்பகுதியை வெட்டவும்.

காம்பு மற்றும் நுனி நீக்கிய காயினை இரண்டாக வெட்டி, பிறகு சன்னமாக நீளவாக்கில் வெட்டவும். 

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பொடி வகைகளை போடவும். உப்பு சேர்க்கவும்.
பின்னர் கடலை மாவினை போட்டு நன்கு பிசறி விடவும். கடலை மாவினை அப்படியே கொட்டாமல் பிசறிக் கொண்ட்டே போடவும். தேவைக்கு அதிகமாக தெரிந்தால் நிறுத்திக் கொள்ளவும். 

ஒரு துளி கூட நீர் சேர்க்க தேவையில்லை.

அடுப்பில் வாணலியை வைத்து சூடேறியவுடன் கடலை எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், பிசறிய வெண்டைக்காய்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

எல்லாவற்றையும் பொரித்த பின்பு, அடுப்பை நிறுத்தி விட்டு, சூடான எண்ணையில் கறிவேப்பிலையை உருவிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்தவற்றை வெண்டைக்காயின் மேல் தூவி அலங்கரிக்கவும்.












கறிவேப்பிலை போடாமலும் செய்யலாம்.
சூடான மொறு மொறுப்பான வெண்டக்காய் தயார்.

தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். அப்படியேயும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

பின் குறிப்பு:

வெண்டைக்காயின் விதைகளை நீக்கிவிடுவது நல்லது, ஏனெனில் எண்ணையில் பொரியும் போது வெடித்து வெடித்து சிதறும் அபாயம் உண்டு.

சிறிது புளிப்புடன் கூடிய சுவை விரும்புபவர்கள் அரை மூடி எலுமிச்சையை பிசிறும் போது பிழிந்து விடலாம்.

கட்டாயம் அடுப்பை அணைத்த பிறகே கறிவேப்பிலையை பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையில் உள்ள நீரினால் எண்ணைய் சடி புடி என வெடிக்கும். பொங்கும் அபாயமும் உண்டு.

காரம் எச்சா வேணும்னா மிளாகாய் பொடியை கூடுதலாக்கவும்.

                                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது::

ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது.
"ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால் அத்தேனை மனிதன் உன்னிடம் இருந்து திருடி விடுகிறான்". அதற்காக நீ வருந்துவதில்லையா?,   அதற்கு அந்த தேனீ பதிலளித்தது "
இல்லெவே இல்லை" ஏனென்றால் மனிதன் என்னிடம் இருந்து தேனை மட்டும்தான் திருட முடியும். தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் திருட முடியாது". 

                                                                   _((()))_

வெள்ளி, 3 ஜூலை, 2015

டபுள் பீன்ஸ் & பட்டர் பீன்ஸ் சாம்பார்




டபுள் பீன்ஸ் மற்றும் பட்டர் பீன்ஸை தோலுரித்து சுத்தம் செய்து வைக்கவும்.


தேவையான பொருட்கள்:

பீன்ஸ் வகைகள்.......1 கப்

துவரம் பருப்பு.......1 1/2 கப்

சாம்பார் தூள்.........1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்.........1 தேக்கரண்டி

புளி.........பெரிய நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம்.....20 எண்ணிக்கை

தக்காளி........1

பச்சமிளகாய் அல்லது வறமிளகாய்......2 (காரத்திற்கேற்ப)

கறிவேப்பிலை......2 இணுக்கு

உப்பு........தேவையான அளவு

கடலெண்ணைய்......தாளிக்க

கடுகு, கடலைப் பருப்பு



செய்முறை:

துவரம் பருப்பை 3 முறை கழுவி குக்கரில் மூழ்கும் வரை நீர் விடவும்.

பீன்ஸ் வகைகளை போடவும். சாம்பார் தூள் எடுத்த அளவில் பாதி போடவும்.

மஞ்சள் தூள் சேர்க்கவும்.

மிகவும் சிறிய குக்கராக இருப்பின் தீயினை குறைவாக வைத்து வேகவிடவேண்டும். இரண்டு விசில் விடவேண்டும்.

பெரிய குக்கராக(5 லிட்டர்) இருப்பின் தீயினைக்கூட்டி வைத்து 3 விசில் விடலாம்.

புளியை வெது வெதுப்பான நீரினை மூழ்கும் வரை ஊற்றி ஊறவிடவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி குறுக்கு வாட்டில் இரண்டாக வெட்டவும்.

தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பச்சை அல்லது வற மிளகாயை அரிந்து விதைகளை அகற்றி வைக்கவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானவுடன் கடலெண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

 முதலில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியைப் போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் புளியை நன்கு கரைத்து, சக்கைகளை அகற்றி நீரை மட்டும் ஊத்தவேண்டும்.

மீதி இருக்கும் சாம்பார் பொடி போடவும்.

வெந்த பருப்பினை ஊற்றி தேவையான அளவு நீர் விட்டு உப்பு போட்டு சரி பார்க்கவும்.

சாம்பார் நன்கு கொதிக்க விடவும்.மல்லி தழை தூவி அடுப்பை நிறுத்தவும்.

சுவையுடன் கூடிய நல்ல மணமான சாம்பார் தயார்.  நெய் சேர்த்து பரிமாறவும்.

இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள உகந்தது.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

ஒரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கடுமையான தண்டனை, அவனால் புரிந்து கொள்ள இயலாத காரியத்தை கட்டாயப்படுத்தி செய்யச்சொல்வது தான்.

காந்தியடிகள்.

                                                           _((()))_  



வியாழன், 2 ஜூலை, 2015

பால் வண்ண நிலவு..!!






நிலவு எத்துனை முறை பார்த்தாலும் சலியாது. எப்படி இரயில், யானை எல்லாம் பார்க்க பார்க்க, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அது போலத்தான் நிலாவும்.

நிலாவப் பத்தி பேசறனா கண்டிப்பா, சிறுமியாய் இருந்த போது பேசியவை இல்லாமல் இருக்குமா என்ன?

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் தகதகவென ஜொலித்துக் கொண்டு கீழ்வானில் ஆரஞ்சு உருண்டையாய் மேலெழும்பு காட்சி காணக் கண் கோடி வேண்டும்.
அப்படி தோன்றும் நிலவை, அப்பா.... எத்தன அழகா இருக்குல ஆத்தா!! என்று என் பாட்டியிடம் வாய்பிளக்க கூறுவேன்.
ஒவ்வொரு முறையும் அவர் தவறாது சொல்வது இதுதான்,
"அப்பிடிலாம் சொல்லப்படாது... நிலாவும் சாமிதான் " என்று சொல்வார்கள்.

அப்பிடினா சாமிய அழகுனு சொல்லக்கூடாதானு எதிர்க்கேள்வி எழுப்புவேன்..!!


நான் முகநூலில் இந்த படங்களை பகிர்ந்த பொழுது தோழிகளின் கமெண்ட் மேலே கூறியிருக்கும் என் சிறு பிராயத்திற்கு இட்டுச் சென்று திரும்பியது :)).
நிலாவில் பாட்டி நூல் நூக்குறாங்கனு கேட்டே வளர்ந்த எனக்கு, இந்த படங்களை எடுத்து முடித்து பார்த்த பொழுது, எத்தன நாள் இதனை நாம் நம்பி இருக்கோம்.
ஆனா இப்பலாம் இதைச் சொன்னா எந்த குழந்தையாவது நம்புமா? என்ற என் அறியாமையும் நினைவு வந்து போனது.
நிஜமாலுமே இது நிலாதாங்க!! பார்க்க சூரியன் போலவே பிரகாசிக்கிறது!!

மகிழம்பூ மரத்தினிடையில் கண்ணாமூச்சி ஆடும் நிலா!!




மரத்துக்கிடையில் பால்நிலா வெளிச்சம்!!

காலை நிலவு!!

பிறை நிலா!! நல்லா உத்து பாருங்க..சிறு சிறு குழிகள் தென்படும்!!!

எடுக்கும் போது கை நடுங்கிடுச்சு..

வெட்டி எடுத்த கேக் துண்டம் போல ஸ்பாஞ்சியா இருக்கு!!



 நிலவில் பிளாஹ் பேர் பொறித்த பெருமையை இத்துடன் நிப்பாட்டுகிறேன்!!

                                                        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

காலம் அனைத்தையும் வென்று விடும்; எனவே நேரத்துக்கு பணிந்து கடமை புரியுங்கள்.

                                                            _((()))_

ஃபுல்கா ரொட்டி/ தந்தூரி ரொட்டி


 என்னைப் பொருத்தவரை ஃபுல்கா ரொட்டி, தந்தூரி ரொட்டி இதெல்லாமே சப்பாத்தியின் மறு பெயர்தான்.
கொஞ்சமா எண்ணைய் தடவி தோசக்கல்லில் போட்டு எடுத்தா சப்பாத்தி.
அதனையே இப்படி நேரிடையா தீயில வாட்டினா மேற்சொன்ன  பேரு..  என் அறிவுக்கெட்டியது இதுதான்.
ஆதலால் இதனை என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழைக்கும் உரிமை யாவருக்கும் வழங்கப்படுகின்றது.

கோதுமை மாவினை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் ஒரு தேக்கரண்டி ஊற்றி மிகவும் தளர்வாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் சரியான பக்குவத்தில் பிசைந்து, சுத்தமான ஈரத்துணியினால் மூடி வைக்கவும்.

ஒருமணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இடவும்.

தோசைக்கல்லில் போட்டு சூடானவுடன் எடுத்துவிடவும்.

இன்னொரு அடுப்பில் க்ரில்லை வைத்து அதன் மேல் இச்சப்பாத்திகளை  இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சுவையான ஃபுல்கா ரெடி!!

இருபுறமும் வெண்ணைய் தடவி, பொருத்தமான குருமாவுடன் பரிமாறவும்.






இக்க்ரில் போன வருடத்திய கொடிஷியாவில் நடந்த பொருட்காட்சியில் வாங்கியது. வாங்கிய நாள் முதல் நல்லுழைப்பை நல்கி வருகிறது.
இதில் கத்தரிக்காயையும் சுட்டு எடுக்கலாம் என்பது கூடுதல் தகவல்!!

பின்குறிப்பு:

ஒன்றுமில்லை!!

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

வெற்றி இல்லாத வாழ்க்கை இல்லை; வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை.

பில்கேட்ஸ்.

                                                               _((()))_  


புதன், 1 ஜூலை, 2015

மாங்காய் தொக்கு/ Mango thokku


மாங்கா தொக்கு செய்வது மிகவும் எளிது!!



தேவையான பொருட்கள்:

கிளிமூக்கு மாங்காய்.......1(பெருசு)

வெந்தயம்............. 2தேக்கரண்டி

 வெல்லம்...............1தேக்கரண்டி

மிளகாய் தூள்...... 1மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)

பெருங்காயப்பொடி.... ஒரு சிட்டிகை ( பெருவிரலும், ஆட்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு) அதுக்காக கைலயேதான் அளவு எடுக்கணும்னு நினைக்காம, சும்மா பெருங்காய டப்பாவ ஒரு குலுக்கு குலுக்கினா போதும்..சில்லர காசு விழுற அளவுக்கு ஓட்டை போட்டு வெச்சிருந்தா நிச்சயம், சிட்டிகையா போடுவதுதான் சாலச்சிறந்தது)

உப்பு.... தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணய்.......3 மேசைக்கரண்டி (ஊத்துனவரைக்கும் சீக்கிரமா கெடாம இருக்கும்)

கடுகு......1/2  தேக்கரண்டி

கறிவேப்பிலை.......2 இணுக்கு

செய்முறை:

கிளிமூக்கு மாங்காயை தோல் சீவி, காய்சீவியில் மெலிதாக துருவிக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து மிதமாக சூடாக்கி, அதில் வெந்தயத்தைப் போட்டு பொன்நிறமாக வறுக்கவும். வெந்தயத்தின் நிறமே பொன்நிறம்தான்லாம் சொல்லக்கூடாது.

வறுத்த வெந்தயத்தை தனியே எடுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

அதே வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.

கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு பொரிந்தவுடன், மாங்காயைப் போட்டு வதக்கவும்.

தேவையான அளவு உப்பு போட்டு  மிளகாய் பொடி சேர்க்கவும்.

மாங்காய் ஓரளவு வெந்து வரும்பொழுது வெந்தயப்பொடி சேர்க்கவும்.

நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். வெல்லத்தை சேர்த்து விழுது நன்கு வெந்து சுருள வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.




இந்த விழுதினை ஆறியவுடன் சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டால் இருபது நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
எண்ணைய் ஊற்றுவதைப் பொறுத்தே இதன் பயன்பாடு இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
ஈரமில்லாத கரண்டியினை பயன்படுத்த வேண்டும். கைபடாமல் இருக்கவேண்டும்.

தயிர்சாதம், கலந்த சாதம் ஏன் அவ்வப்பொழுது ஊட்டுக்கார் வெளியூர் கிளியூர் போயிருந்தா, குழம்பு வெக்க மொடையா இருந்தா தோசைக்கு, சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்புடலாம்.

இந்த தொக்குக்கு கிளிமூக்கு மாங்காயா இருந்தாதான் நல்லா இருக்கும். (அதுவும் பழுக்காம பச்சக்காயா இருக்கோணு) குண்டு மாங்கா அவ்வளவா நல்லா இருக்காது. கிளிமூக்கு மாங்கா புகைப்படம் எடுக்காம விட்டுட்டேன் :( சீவினப்புறம்தான் பிளாஹ்ல போடற ஞாபகமே வந்துச்சு.

ஆனா என்ன கிளிமூக்கு மாம்பழம் இருக்கே!!:)


பின் குறிப்பேய்ய்ய்ய்!!

நல்லணெயேதான் ஊத்தணுமா!! (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வாணுமா??)
அப்பிடீலாம் இல்லீங்.... உங்குளுக்கு எந்தெண்ணை கெடைக்குமோ அதையே ஊத்தலாம் (அரிக்கேன் லைட்டுனாலும் பரவாலதான்!!)

என்னையாட்டம் பெருங்காயம் போட மறந்துட்டாலும் பரவாலீங்..சாமி கண்ணக்குத்தாது.. கோழி கொத்தாது...மாடு இடிக்காது (முட்டாது)!!

20 நாளு கேரண்டி கொடுத்தேனு அதையே நம்பிட்டு,  ஃப்ரிட்ஜ்ல வெக்காம வெளிய வெச்சா பூசணம் (பூஞ்சாணம் யாருங்க அவர்.. எந்தூரு சனம்லாம் கேட்கப்படாது.. (ஃப்ங்கை) புடுச்சுடும்!!

கிளிமூக்கேதானா (மீண்டும் பெட்ரோமாக்ஸேதானா!!) எந்த பச்ச மாங்கா கெடைக்குதோ அதைய வெச்சு சோதனை பண்லாம் தப்பே இல்ல!!

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

கோபம் எனும் கொடிய அமிலம்; அது விழும் இடத்தை விட, இருக்கும் இடமே பெரிதும் நாசமாகும்.

                                                           _((()))_


புதன், 24 ஜூன், 2015

பூப்பூவாய் பூத்திருக்கு..


இட்லி செய்வது எப்படி? னு மட்டுமே பார்த்தா போதுமா, என்னையும் கொஞ்சம் உலக உலா அழைத்துச் செல்லேன் என்ற இட்லிப்பூவின் வேண்டுகோளை சிரமேற்க் கொண்டு இதோ இங்கே காற்று வெளியினிலே கவிதை பாட விட்டுள்ளேன்.
நிலவுக்கு மட்டும்தான் அழகு நடை பயில வானம் சொந்தமா என்ன, நாங்களும் நீ தொட்டு விடும் தூரம்தான் என வான மகளிடம் சொல்லாமல் சொல்கின்றதோ இப்பூங்கொத்து!!

வானத்தப் பார்த்தேன்!!

பூமியப் பார்தேன்!!
இப்பிடிலாம் எழுதி உங்களை நோகடிச்சேனு கோச்சுக்காதீங்க மக்களே!! ஏதோ படப்பாடலையும் சுட்டு, என் எண்ணங்களையும் கோர்த்து எனக்கு தெரிஞ்சத எழுதிப்புட்டேன்.

நீலவானத்தை வெண்மேகம் அலங்கரிக்க, நானும் அதற்கு சளைத்தவளில்லைனு சிவப்பூம், பச்சையும் கலந்து அழகை அள்ளித்தெளிக்கின்றன இம்மலர்கள் :)

இட்லிப்பூ இந்த மழைக்கதுக்கும் ரொம்ப ரொம்ப அழகா பூத்து பூத்து குலுங்குது.
பார்க்க பார்க்க பரவசம்!! இத்தனைக்கு ரொம்ப ஒண்ணும் பெரிசா கவனிச்கிறதே இல்லீங்க, சொல்லபோனா சுத்தமா கண்டுக்கிறதே இல்ல, உரம் வெச்ச ஞாபகமே இல்ல, தண்ணி மட்டும் ஊத்தறதோட சரி..அதுக்கே இவ்வளவு அழகு காட்டி, மனதை புத்துணர்வாக்குது பாருங்களேன்!! ரொம்ப ரொம்ப நன்றி இட்லியக்கா !!

இதனோட அழகுல மயங்கி போனவாரம் வீட்டுக்கு வந்த நட்பூ குழாம், எங்கிட்ட கேக்காமயே படக்குனு 2 பூவ பறிச்சிட்டாங்க. ஒரு நிமிசம் இல்லீங் ஒரு நாள் பூரா திடுக்குனு இருந்துச்சு. இருந்தாலும் சுதாரிச்சுக்கிட்டேன்.
வேறென்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்க!! ஒருவேளை அம்மலர் சாமிக்கு போயிருக்கலாம், இல்லேனா அவங்க வீட்டு வரவேற்பரைக்கு அலங்காரமா அமர்ந்திருக்கலாம் இல்லீங்களா?
அதுனால இதெல்லாம் சகசமப்பூனு மனச தேத்திக்கிட்டு, மலர்தானே மீண்டும் மலராமலா போய்டும்னு ஜமாதானமாகிட்டேன்!!

நல்ல வேளை அப்பதான் போட்டோ புடுச்சிருந்தேன்..
இவிங்கதான் அவிங்க!! நல்லா சிவப்பு நிற பந்து போல அழகா இருந்தாங்க!!
எதுக்காக இதனை இங்க பொறிச்சேனா, இது போல நடப்பது சகஜம் எனவும், நாம் இது போல இருந்தால் இப்படியும் நினைப்பாங்களோனு யோசிக்கவும் ஏதுவாகவே இதனை எழுதியுள்ளேன்.

சிலர் வீட்டுக்கு வெளியில் வைக்கும் அரளியில் மலர் கொய்துவார்கள், அதனை வேண்டாமென நினைக்கும் மனமும் உண்டு, இல்லை சாமிக்குத்தானே யார் கொண்டு சென்றால் என்ன என நினைப்பவர்களும் உண்டு.
சிலருக்கு நல்லதாக தோன்றும் விசயம் சிலருக்கு தீயதாக தோன்றும். அதுனால எப்பவும் ஒரே கோணத்தில சிந்திக்காம நாணயத்திற்கு இரண்டு பக்கமுண்டுனு எண்ணி வாழவேண்டும். இது எனக்கு நானே சொல்லிக்கிறனுங்...

                                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

நன்மை ஒரு வைத்தியன்; தீமை, சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.

                                                     _((()))_