திங்கள், 16 மார்ச், 2015

பேபி கார்ன் 65



பேபிகார்ன் எங்க வீட்டு சமையலில் அடிக்கடி இடம்பிடிக்கும் பொருள். க்ரேவி செய்வதுண்டு. எண்ணையில் போட்டு பொரிப்பது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விசயமே!!
அத்தி பூத்தாப்பில பொரிச்செடுத்த பேபிகார்ன் 65 எப்படி தயாராகுதுனு இப்ப பார்க்கலாம் வாங்க!!

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன்........1பொட்டலம்.

இஞ்சி, பூண்டு விழுது.........1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்..........காரத்திற்கேற்ப

கரம்மசாலா பொடி........1/4 தேக்கரண்டி

மைதாமாவு............4 மேசைக்கரண்டி

கார்ன்மாவு (சோளமாவு).........2 மேசைக்கரண்டி

கடலை எண்ணைய்.........பொரிக்கதேவையான அளவு

உப்பு.........தேவையான அளவு


செய்முறை:

பேபிகார்னை தோல் நீக்கி நீள் சதுர துண்டுகளாக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதினை போட்டு பேபிகார்னை பிசறி வைக்கவும்.

அரைமணிமுதல் ஒரு மணிவரை காத்திருக்கலாம். ஊட்டு சனத்தோட பொறுமைக்கேத்தாப்புல நேரம் எடுத்துக்கலாம்.

ஒரு பேஸனில் (வாயகன்ற பாத்திரம்) மைதாமாவு, கார்ன்மாவு, கரம்மசலா பொடி, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கட்டிகளின்றி ஓரளவு நீர்க்க கரைத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன், எண்ணைய் ஊற்றவும்.

எண்ணைய் காய்ந்ததா என சோதிக்க, ஒரு துளி கரைத்த மாவினை எண்ணையில் போடவும். மாவு எண்ணையில் குதித்தெழுந்தால் எண்ணைய் காய்ந்துவிட்டது என்று அர்த்தம்.

கரைத்த மாவில் பேபிகார்ன்களை இரண்டு, மூன்றாக போட்டு நனைத்து, காய்ந்த எண்ணையில் போடவும்.

ஓரளவு வெந்தவுடன் எடுத்துவிடவும்.

மீதம் உள்ள அனைத்தையும் அதே போல் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முதலில் போட்டு எடுத்தவற்றை மீண்டும் காய்ந்த எண்ணையில் இரண்டாவதாக போட்டு எடுக்க வேண்டும்.
இப்பொழுது மொறு மொறுப்பான பேபிகார்ன் 65 தயார்.

இரண்டு முறை பொரித்தெடுத்தால்தான் மொறு மொறுப்புடன் இருக்கும். எல்லாத்தையும் ஒரே மூச்சில் ஒருமுறை போட்டு எடுத்துவிட்டு, பிறகு இரண்டாவது போடவேண்டும் என்பதில்லை.
இரண்டு அடசல்களோ அல்லது அதற்கு மேலோ எடுத்துவிட்டு, அதனை இரண்டாவதாகவும் போட்டு எடுத்துவிடலாம்.


மூன்றாவது படத்தில் இருக்கும் பட்சத்தில் எடுத்துவிட்டு,  ஒன்றாக சேர்ந்து இருக்கும் கார்ன்களை தனித்தனியாக பிரித்து மீண்டும் அதே எண்ணையில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
 



வளையல் போல  பெரியவெங்காயத்தையும்,  பல்லுச்சக்கரம் போல்  கேரட்டையும், சிறு சதுர துண்டுகளாக எலுமிச்சையையும் வெட்டி வைத்து அலங்காரம் செய்யலாம்னு நினைக்கிறதுக்குள்ள பொரித்த கார்ன்கள் தீர்ந்துவிட்டது.
இருந்த கார்ன்களில் இவற்றை மட்டுமே காப்பாற்றி புகைப்படம் எடுக்கமுடிந்தது:))))).

இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம், இந்த பலகாரம் எவ்வளவு சுவையானது என்று!!

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 படித்ததில் பிடித்தவை:

1.வேலையை மாற்றிச் செய்வது ஓய்வுக்கு சமம்.

2. வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் முன்னேற்றம், நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது.

3.பிரச்சனைகள்தான் மனிதர்கள் யாரென்று காட்டுகின்றன.

                                                                _()_()_()_()_
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்